ஆட்சி, அதிகாரப் பதவிகளனைத்தும் கைவிட்டுப்போயிருக்கும் நிலைமையை மாற்ற, ஓ.பி.எஸ். கோவில் கோவிலாய் யாத்திரை கிளம்பியிருக்கிறார்.
ஜெ. ஆட்சிக் காலத்தில் டான்சி வழக்கு விவகாரத்தில் ஜெயலலிதா முதல்முறையாக முதல்வர் பதவியை இழக்கநேரிட்டது. அது சமயம் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற் காக தனக்குக் கட்டுப்பட்டவரும், சாதுவான குணம் கொண்டவருமான ஓ.பி.எஸ்.ஸை இடைக்கால முதல்வராக்கினார். பின்னர் ஜெ.வின் காலத்தில் வலுவான நிதியமைச்சராக ஜெ.வுக்கு அடுத்தபடியான இரண்டாம் நிலையிலிருந்தார்.
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் சிறை சென்றபோதும் ஓ.பி.எஸ்.ஸே முதல்வர் பதவிக்கான ஜெ.வின் தேர்வாக இருந்தார். 2016-ல் ஜெ.வின் மரணத்தையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் தற்காலிக முதல்வராகத் தேர்ந்தெடுத்தது ஓ.பி.எஸ்.ஸைத்தான்.
அ.தி.மு.க. அதிகாரத்தின் பொருட்டு இரண்டாகப் பிளக்கிற நிலையில் சசிகலாவின் திட்டப்படி முதல்வரானார் எடப்பாடி. அப்போது ஓ.பி.எஸ். டம்மியாக்கப்பட்டார். அதுசமயம் 9 எம்.எல்.ஏ.க்களைத் தன் கைவசம் வைத்திருந்த ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தி, எடப்பாடியுடன் சமரசம் மேற்கொண்டு துணை முதல்வர் அதிகாரத்திற்கு வந்தார்.
எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சிமுடிந்து தி.மு.க. அரியணை ஏறியது. அது சமயம் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்குமான இடைவெளி அதிகமானதால், அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். நீக்கப்பட்டார். சுமார் 15 ஆண்டுகள் வரை அதிகார உச்சியிலிருந்த ஓ.பி.எஸ். அதலபாதாளத்திற்கு வந்தார். பா.ஜ.க.வுடன் கூட்டுவைத்து ராமநாதபுரம் எம்.பி. தொகுதியில் வெற்றிபெற்று மத்திய அமைச்சராகலாம் என்ற அவரின் கணக்கு தேர்தல் தோல்வியால் ஒர்க்அவுட் ஆகவில்லை.
இந்நிலையில் கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில் பூரண பூஜை செய்து வழிபட்ட ஓ.பி.எஸ்., பின்பு அந்தப் பகுதியிலுள்ள செண்பகத் தோப்பிலிருக்கும் தனது குலதெய்வம் கோவிலில் குடும்பத்தாரோடு பொங்க லிட்டு வழிபாடு நடத்தினார்.
பின் டிச. 18, 19 தேதிகளில் திருச் செந்தூரில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த ஓ.பி.எஸ்., நெல்லை மாவட்டத்தின் கீழ்ப் பகுதியான உவரியின் சிறப்புவாய்ந்த சுயம்புலிங்க சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அதையடுத்து உவரி கடற்கரை பகுதி தாண்டி நெல்லை மாவட்டத்தின் தென்கடலோரமுள்ள கூடங்குளம் பகுதியை ஒட்டிய விஜயாபதியிலிருக்கும் எழில்மிகுந்த கடற்கரையோரம் அமைந் துள்ள மாமுனிவர் விஸ்வாமித்திரரின் கோயிலுக்கு டிசம்பர் 20, காலை 11 மணியளவில் வந்தார் ஓ.பி.எஸ்.
விஸ்வாமித்திரர் கோயிலுக்கு வந்த ஓ.பி.எஸ்., முதலாவதாக அங்குள்ள ஹோமகுண்ட கணபதியை வணங்கி, அதனருகிலுள்ள விஸ்வாமித்திர மகரிஷி சன்னிதானத்தில் வழிபாடு செய்தார். பின்னர் அந்த கருவறை முன்பு தரையிலமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்திருக்கிறார். தொடர்ந்து விஸ்வாமித்திர மகாலிங்கேஸ்வரர் சன்னதியில் பூஜை செய்து தரிசனம் செய்தார். கோயில் வளாகத்திலுள்ள சிவன், காளி சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பின்பு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
மகரிஷிகளில் மூக்கின் நுனியில் முன்கோபத்தை வைத்திருக்கும் மாமுனி விஸ்வாமித்திரருக்கென்று விஜயாபதி தவிர்த்து, தமிழகத்தின் வேறு எந்த பகுதி யிலும் கோவில் இல்லை. ராவணதேசம் பயணப்பட விருந்த ராம, லட்சுமணரை இந்தக் கடலோரப் பகுதிக்கு விஸ்வாமித்திரர் அழைத்து வந்து இந்த இடத்தில் யாகம் செய்ததன் பலனாக, விஸ்வாமித்திரர் இழந்த தன் சக்தியை மீட்டு மீண்டும் பிரம்மரிஷி யானார். அதனால் இந்த இடத்தில் அமைந்திருக்கிற விஸ்வாமித்திரர் கோவிலில் வழிபட்டால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கும் என்றும், இழந்த சக்திகள், அதிகாரப் பதவிகளை மீண்டும் பெறமுடியும் என்றும் பக்தர்கள் நம்பிக்கை வைத்திருப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறாராம் ஓ.பி.எஸ்.
இக்கோயில் 64 விதமான தோஷங்களுக்கான பரிகார ஸ்தலமாக இருப்ப தால்தான் அரசியல், திரையுலக பிரபலங்கள் விஸ்வாமித்திரர் கோயிலை நாடிவருகிறார்கள். காலமான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சசிகலா உள்ளிட்ட வர்களும் விஸ்வாமித்திரர் கோயில் வந்து வழிபாடு நடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்களாம். அதிகார உச்சத்திலிருந்த ஓ.பி.எஸ். தற்போது இழந்ததை மீட்டெடுக் கவும், லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்ற லட்சியத்துக் காகவும் தான் தொடர் கோயில் யாத்திரையை மேற்கொள்கிறார் என்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமானவர்கள்.
-பி.சிவன்